தூத்துக்குடி: வ.உ. சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக, நூற்றாண்டு விழாவையொட்டி டி.எம்.பி. வங்கியின் பிரத்யேக தபால் தலை, அஞ்சல் அட்டையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தொடர்ந்து நடமாடும் ஏடிஎம் வாகனம், தடுப்பூசி வாகன சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் யுகத்தில் வங்கி துறையில் மாற்றம்
நிகழ்ச்சியில் பேசிய அவர், "வங்கித்துறையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் 2018 ஆம் ஆண்டுவரை பல்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தன.
பல இடங்களில் கடன்கள் திரும்பி வராத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு வளர்ச்சி நிதி, துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பிரச்சினைகளை எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தற்போது பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கி துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து கொண்டே பல கிராமங்களுக்கு வங்கி சேவையை கொடுக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
வங்கி கணக்கு - மனிதனுடைய உரிமை
ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வைப்புதொகை இல்லாமல் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க 'பாரத பிரதமர் ஜன்தன் யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.
இந்த கணக்கு தொடங்கப்பட்டது மூலமாகவே இன்றைக்கு சிறு வணிக கடன், முத்ரா வங்கி கடன் என பலவித கடன்களை சிறு வணிகர்களும் பெற முடிகிறது. கரோனா ஊரடங்கு தடைகளையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடிகிறது. வங்கி கணக்கு என்பது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. அது எல்லாருக்கும் முக்கியமான ஒன்று.
73 கோடி பேருக்கு தடுப்பூசி
கரோனா 2ஆவது அலை ஊரடங்கில்கூட எந்தவித கூடுதல் பிணையம் இல்லாமல் கடனுதவி கொடுக்க அரசு உதவியது. அதன்காரணமாக தற்போது தொழில்கள் அனைத்துமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது 73 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் சிறிய மருத்துவமனைகள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகள் அரசு அறிவிக்கக் கூடிய நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார்... கவனமாக காய் நகர்த்தும் பாஜக!