தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாரதிய ஜனதா கட்சியினை முற்றிலுமாக மக்கள் புறக்கணிக்கக்கோரியும் நாளை கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் மேற்கொள்கின்றார்.
8,9,10ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபயணத்தினை முடிக்கும் அவர் 11ஆம் தேதி கேரளாவில் நடைபயணத்தினை தொடங்குகின்றார். கிட்டத்தட்ட 3500 கிலோ மீட்டர் வரையில் 160 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு யாத்திரைக்கும் பின்புதான் பெரிய தலைவர்களாக உருவாகி உள்ளனர். அதைப்போல்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு பின் பெரிய மாற்றம் ஏற்படும். நிச்சயமாக விரைவில் பிரதமர் ஆவார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தவிர வேறு யார் பொறுப்பேற்றாலும் அது நிரந்தரத் தலைவராக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே நிரந்தரத் தலைவர் என்றால் அது ராகுல் காந்தியால் மட்டும் தான் இருக்க முடியும்’ என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைப்பு - தமிழ்நாடு அரசு