தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாகுளம், துவரத்தை, கன்னிமார்கூட்டம், தத்தநேரி, வீரகாஞ்சிபுரம் ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய அவர், 100 நாள் வேலையை முறையாக வழங்குவதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ரேஷனில் பொருள்கள் முறையாக கிடைப்பதில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. சாலை வசதி செய்து தருவதில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கக்கூடிய சட்டங்களை மோடி அரசு உருவாக்கி உள்ளது. இதனை தன்னை விவசாயி என கூறும் முதலமைச்சரும் வரவேற்றுள்ளார். இந்த சட்டங்களை எதிர்த்து போராடுவது, குரல் கொடுப்பது திமுக தான். தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அதிமுகவினர் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்”என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காலுன்ற சினிமா பிரபலங்களை பாஜக தன்வசப்படுத்துகிறதா? என்ற கேள்விக்கு,”பாஜகவின் அடிப்படை கொள்கை வெறுப்புணர்வைத் தூண்டி மக்களைப் பிரித்து வாக்கு வங்கிகளாக மாற்றுவது. தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட அரசியலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
யார் வேண்டுமானாலும் தங்களை எந்தக் கட்சியிலும் இணைந்துக் கொள்ளலாம். அடிப்படையில் பாஜக எதற்காக நிற்கிறது. அந்த இயக்கத்தினுடைய உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்” என பதிலளித்தார்.
இதையும் படிங்க:வேல் யாத்திரை சென்றாலும் பாஜக வெற்றி பெற முடியாது - தா.பாண்டியன்