தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், கடந்த 13ஆம் தேதி மருத்துவப் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், தேவையின் அடிப்படையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 316 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டநிலையில், இன்று(மே.31) முதல் இரண்டாம் அலகிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ளது.
இரண்டாம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கண்காணிப்பு குழுவின் அனுமதி தேவை என்பதால், அலகு குறித்த முழு அறிக்கையும் கண்காணிப்பு குழுவிடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு நேற்றிரவு(மே.30) அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகில் இன்று முதல் 4 நாளைக்கு சோதனை ஓட்ட முறையில், ஆக்சிஜன் உற்பத்தி பணித்தொடங்கியுள்ளது. சோதனை ஓட்டம் முடிந்தபிறகு மருத்துவத்துக்கு ஏற்ற ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.