தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டும், பல கிராமங்களுக்கு செல்ல பாதைகள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில், ஆற்றுப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (டிச.23) ஏரல் பகுதிக்குச் செல்வதற்கு தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், “இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது சாலைகள்தான். தற்போது பழுதடைந்த சாலைகளுக்கு நிரந்தரப் பணிகள் செய்ய இயலாது. எனவே, தற்காலிகமாக சாலைகள் அமைத்து போக்குவரத்து இயக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏரல் பாலம் மற்றும் ஆத்தூர் பாலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
ஏரல் பாலத்தில் தற்காலிக இணைப்பு சாலைகள் முற்றிலுமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பாலத்தில் இரண்டு தூண்கள் அதிகமாக கட்டி இருக்க வேண்டும். அதனால், தற்போது தற்காலிக இணைப்புச் சாலைகள் கட்டி, பாலம் அமைக்கும் பணியை முடித்து விட்டனர்.
ஆத்தூர் பகுதியில் பாலம் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்த பின்னரே, பாலத்தில் போக்குவரத்து இயக்கப்படும். தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலத்தில் உறுதித்தன்மை இருப்பதால், அதன் வழியே போக்குவரத்து இயக்கப்படும்.
மேலும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் பாதிக்கப்பட்ட சாலைகளுக்கு தற்காலிக சாலைகள் அமைத்து, இன்று இரவுக்குள் பணிகள் முடிக்கப்படும்” என தெரிவித்தார். தென் மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஆயிரம் கோடி ரூபாய் பொதுப்பணித்துறைக்கு இழப்பு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - அமைச்சர் பெரியகருப்பன்