தூத்துக்குடியில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் தூத்துக்குடி கல்வி மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சுமார் 130 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, “தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிகள், குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள், குழந்தை நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், குழந்தை பாதுகாப்பு, குழந்தை உரிமைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பள்ளி இடைநிற்றலைக் கண்டறிந்து மீண்டும் கல்வியைத் தொடரச் செய்தல் உள்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது 1098 மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதி குமார், பள்ளிக் கல்வித்துறை துணை ஆய்வாளர் தர்ம ராஜன் ஆகியோருடன் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.