தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வீரபாண்டியன் புலிக்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மந்திரத்தேவர் (வயது 80). இவருக்கு, காளியம்மாள் (வயது 68) என்ற மனைவியும், முருகன், சண்முகராஜ் என்ற இருமகன்களும், விஜயலட்சுமி, வேலாட்சி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், இவரை அவரது வீட்டிற்கு கும்பலாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இன்று (டிச.04) வெட்டி படுகொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த கடம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மந்திரத்தேவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில், மந்திரத்தேவருக்கும் அவருடைய உறவினர் ஒருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலம் தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மந்திரத்தை அவரது உறவினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கடம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ம.பி.யில் மூவர் கொலை: முக்கியக் குற்றவாளி என்கவுன்ட்டர்