மத்திய அரசின் 'போஷான் அபியான்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், ஊட்டச்சத்து விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக வ.உ.சி. கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வ.உ.சி. கல்லூரியிலிருந்து தொடங்கிய இப்போட்டி பிரையன்ட் நகர், காமராஜ் கல்லூரி வழியே தருவை மைதானத்தில் முடிவடைந்தது. இப்போட்டியில் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
"கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் தவிர்க்கப்படும்.
ஆகவே ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும், இதேபோல், ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடும் விதமாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இப்போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி, செந்துறை ரோடு பேருந்து நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்று, முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:
கோபிசெட்டிபாளையத்தில் களைகட்டிய மாரத்தான் போட்டி
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு - 8,000 பேர் கலந்துகொண்ட மாரத்தான்!