தூத்துக்குடி: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நிவர் புயல் தமிழ்நாடு மக்களை அச்சுறுத்திவந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், நாளை, நாளை மறுநாள் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்துவருவதால், தமிழ்நாட்டைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகின்ற 3ஆம் தேதிவரை தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம், மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்க கடலில் நாளை காலை புயல் உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்