தூத்துக்குடி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பவுல்ராஜ், சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்.
இவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய ரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூறியதன் அடிப்படையில், பவுல்ராஜின் 10 வயது மகன் சுத்தப்படுத்தியுள்ளார்.
தனது தந்தைக்காக சிகிச்சைக்குப் பயன்படுத்திய ரத்தமும், சதையும் படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை கழுவி உள்ளார். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி உடனடியாக ஈடிவி பாரத் செய்தி தளத்திலும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை தாலுகாவில் தனியார் நாளிதழில் நிருபராக பணியாற்றி வரும் ஆண்டனி இன்பராஜ் என்பவரை, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தை சக பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இரத்தம் சதை படிந்த கத்தி, கத்தரிக்கோலை சுத்தம் செய்யும் சிறுவன்.. அவல நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை!