தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது. இந்த தசரா விழாவானது கடந்த 15ஆம் தேதி கொடி ஏற்றப்பட்டு பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். மேலும், தசராவை மையப்படுத்தி குலசேகரப்பட்டினத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள்.
பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும்போது அணியக்கூடிய மாலையானது, அவர்கள் கடலில் சென்று நீராடும்போது வாங்கிக் கொள்வார்கள். இதற்காக குலசேகரபட்டினம் கடற்கரையில் நரிக்குறவர் இனத்தினர் ஏராளமானவர், தற்காலிகக் கடைகளை அமைத்து மாலைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்து தயாரிப்பு பொருட்களை வாங்கி, கடற்கரையில் அமர்ந்தவாறு மாலைகளை கோர்த்து அவர்கள் விற்பனை செய்கின்றனர். இதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, வள்ளியூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நரிக்குறவர் இன மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் தற்காலிகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களில் ஒருவரான அண்ணாமலையின் மனைவி அம்சவல்லி, சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே தங்கி வியாபாரம் செய்து கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (அக்.21) இரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் முழித்து பார்த்தபோது, அம்சவல்லியின் இரண்டு வயது பெண் குழந்தை காணாமல் போய் உள்ளதைப் பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு அதிமுக வார்டு உறுப்பினர் சரமாரியாக வெட்டி கொலை - கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!
இதனால் அதிர்ச்சியடைந்த அம்சவல்லி, குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர், குழந்தை காணாமல் போனதை உறுதி செய்த நிலையில், அம்சவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். இந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அம்சவல்லிக்கு இரண்டு திருமணம் ஆகி இரண்டு பேரும் இறந்து விட்ட நிலையில், 3வதாக அண்ணாமலையை திருமணம் செய்துள்ளார். அம்சவல்லிக்கு முத்துவேல் (14), ரத்னாவள்ளி (8), செல்வலட்சுமி (4), கார்த்திகை வள்ளி (2) என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தை காணாமல் போய் கண்டுபிடித்த நிலையில், மற்றொரு பெண் குழந்தை குலசை முத்தாரம்மன் கோயிலில் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறையில் கூட்டு.. வெளியில் திருட்டு - தென்காசியில் 3 கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?