தூத்துக்குடி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களின் மீது உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, சுற்றறிக்கையை வாபஸ் பெற்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தின் மீது மதிப்பு மரியாதை இருந்தால், சனாதன எதிர்ப்புக் கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லையேன்றால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகி விடும்.
மேலும், தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்த வருடம் மட்டும் 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மழைக்காலம் தொடங்கி விட்டால் டெங்குவானது அதிகமாக பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. தூத்துக்குடி எம்.பி கனிமொழி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு மட்டுமே மத்திய அரசுக்கு அதிகமாக பணம் கொடுப்பதாக ஒரு பெரிய காமெடியை சொல்லி இருக்கிறார்கள்.
பிரதம மந்திரியின் ‘அனைவருக்கும் வீடு கட்டும் திட்டமானது’ மத்திய அரசாங்கத்தின் திட்டமாகும். அவரவர் வங்கியில் மானியத்தை அளிப்பது மத்திய அரசு, இன்னொருவருடைய திட்டத்தை தங்களுடைய திட்டம் என சொல்லி கொள்வது திமுகவிற்கு பழக்கம். சி.ஏ.ஜி அறிக்கையில் மிகத் தெளிவாக தமிழ்நாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசுகள் தான். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் தமிழ்நாட்டில் பயனாளிகளிடம் முறைகேடு நடந்துள்ளன. இதனை பாஜக குற்றச்சாட்டாக முன் வைக்கின்றது.
I.N.D.I.A கூட்டணி குளறுபடிகளில் முடியப்போகிறது. ஏனென்றால், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், முலாயம் சிங் ஆகியோர் சமயம் வரும்போது காங்கிரஸ்ஸின் கழுத்தை அறுப்பார்கள். இது நடக்கத்தான் போகின்றன.
திமுக அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கொடுப்போம் எனவும், பின்னால் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறியுள்ளது பிரச்னையாக உள்ளது. தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்கள் என்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அல்லது திமுகவிற்கு ஆதரவு அளிக்கக்கூடிய பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இந்த எண்ணம் தவறானது.
ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார் என்பது வெட்கக்கேடு, கேவலமானது. இதைவிட ஒரு வெட்கக்கேடான ஒரு விஷயம் வேறு ஏதாவது இருக்குமா? செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க வேண்டுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய அடுத்த நொடி அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விலக்கி இருக்க வேண்டாமா? பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு மீறப்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்ய உத்தரவு விட்டிருக்கிறது. முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் பொன்முடியை பதவி விலக சொல்ல வேண்டும் ஆனால் செய்யவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் நீண்ட கால கோரிக்கையாகும். 1952இல் இருந்து 15 வருடங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் இருந்தது. சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரே தேர்தல் நடந்து வந்தது. ஆனால், தற்போதும் இது நடக்க வேண்டும். இதனால், நேர விரயம், பணம் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 2019ல் தேர்தலில் 60 ஆயிரம் கோடி செலவானதாக தகவல் உள்ளன.
பல மாநிலங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் வருவதனால் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய குந்தகம் வருகிறது. ஆகவே, ஒரு நாடு ஒரு தேர்தல் 2024ல் வர வாய்ப்பு இல்லை. 2029ல் வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது. அதற்காக குழு அமைக்கப்பட்டு இருக்கிறது என தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க:மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது..! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கடும் விமர்சனம்!