ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சார்பில் போட்டியிடும் அகல்யாவை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, "இந்த இடைத்தேர்தலில் தோற்றுவிட்டால் ஆட்சி கலைந்து விடும் என்று அதிமுக தனது ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் பாரதிய ஜனதா கைப்பற்றிக் கொண்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாட்டை ஆள்வது குருமூர்த்தி எனும் கணக்காளரும், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்ற அரசு அலுவலரும்தான். ஜெயலலிதா இருந்திருந்தால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். ஆட்சியாளர்களை, வருமான வரி சோதனைகளை மிரட்டி பணிய வைத்துள்ளனர்" என்றார்.