தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் 'தமிழ் கனவு' நிகழ்ச்சி நேற்று (செப். 8) நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பின்னர் 'நாமும் கல்வியும்' என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசுகையில், "தமிழகம் எப்போதும் எழுத்தை, கல்வியை கொண்டாடக்கூடிய மாநிலமாக இருந்துள்ளது. தமிழகத்தில் நம் முன்னோர்கள் கல்வி என்பது அனைவருக்கும் சமம் என்றனர்.
இதை தான் ஒளவையார், திருவள்ளுவர் தங்களது பாடல் வரிகள் மூலமாக கூறுகின்றனர். கல்வியை கொண்டாடிய மக்கள் வாழ்ந்த நாடு தான் தமிழகம். கீழடியில் பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் தான் அகழ்வாரய்ச்சி தொடரப்பட்டது. கீழடி அருங்காட்சியகம் நம்முடைய பெருமை. பாறைகளிலும், ஓடுகளிலும் 2 ஆயிரத்து 400 ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட தமிழி என்ற நம்முடைய எழுத்து முறை கிடைத்துள்ளது. அப்போதே, எல்லோருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது.
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட அகழ்வாரய்ச்சி இடங்களை நீங்கள் போய் பார்க்கவேண்டும்" என்றார். தொடர்ந்து கனிமொழி, மாணவர்களை பார்த்து எத்தனை பேர் இந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அனைவரும் மௌனமாக இருக்க எத்தனை பேர் ஜெயிலர் படத்தினை பார்த்துள்ளீர்கள் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அதற்கும் மாணவர்கள் அமைதியாக இருக்க ஜெயிலர், கெரியன் சீரியல்கள் பார்ப்பது போல இந்த இடங்களை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், "2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு தமிழகர்களின் திறமையை தெரிந்து கொள்ள முடியும். தமிழர்கள் தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து அங்கேயே வாழ்ந்து கடைகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ள முடியும் எல்லா உயிரினங்களும் வாழவேண்டும்.
கல்வி என்பது எல்லோருக்குமானது என்று வாழந்தவன் தமிழன், தமிழகம் மட்டும் எல்லாவற்றிலும் வித்தியசமாக இருப்பதாக கேட்கின்றனர். காமராஜ் காலம் முதல் அதன்பின் வந்த ஒவ்வொரு அரசும் கல்வி பணியை செய்து இருக்கிறது. தேசிய அளவில் உயர்கல்வியை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தான் புதிய கல்விக் கொள்கை.
ஆனால், நாம் 52 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம். அதை தட்டி பறிக்க முயற்சிக்கிறார்கள்.எனவே கல்விக்காக போராடியவர்களின் வரலாறுகளை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்காக போராட்டம் நடத்தியவர்கள், கண்ணீர் சிந்தியவர்கள், சிறை சென்றவர்களை தெரிந்து கொள்ளவேண்டும்" என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விபத்தில் வலது கையை இழந்தும், தன்னம்பிக்கையால் ஆட்சியரானேன்" - ஆட்சியர் மகாபாரதி ஊக்கம்!