தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச்சென்று காவல்துறையினர் துன்புறுத்தியதில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பால்துரை மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்களான செல்லதுரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி அலுவலர்கள் நேற்று (ஜூலை 8) கைது செய்தனர். இதன்மூலம், சாத்தான்குளம் வழக்கில் ஆய்வாளர் உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை பெண் காவலர் ரேவதியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சிபிசிஐடி அலுவலர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், பால்துரை, தாமஸ் இருவருக்கும் சர்க்கரை நோயின் அளவு அதிகரித்துள்ளதால் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.