தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25 ஆவது வெள்ளிவிழா கிளை திறப்பு விழா கோவில்பட்டி ராஜீவ் நகரில் இன்று (ஜன.21) நடைபெற்றது. தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கூட்டுறவு வங்கியின் புதிய ஏடிஎம் திறப்பு, எட்டயபுரம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் பங்க் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர், 345 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரேஷன் பணியாளர்களுக்கு ஊதியம் மாற்றி அமைப்பது குறித்து நிதித்துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு தற்போது முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ரேஷன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வை முதலமைச்சர் அறிவிப்பார்.
ரேஷன் கடைகளில், பரபரப்பான நேரத்தில் (peak hours) இன்டர்நெட்டை அனைவரும் பயன்படுத்தும் போது, இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் பயோமெட்ரிக் முறையில் சிறிது பாதிப்பு ஏற்படுகிறது. இது ரேஷன் கடைகளுக்கு மட்டுமல்ல, செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வேகம் குறையும் போது பிரச்னை வரும் என்றார்.
வரும் 27 ஆம் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியதை பற்றிய கேள்விக்கு, நாங்கள் ஆட்சியும் கட்சியும் சரியாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர் இன்று மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து நாள் குறித்துக்கொண்டிருக்கிறார். அன்றிலிருந்து மூன்று பொங்கல்கள் போய் விட்டது. இப்போது வரை ஆட்சி முடிந்து விடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அவர் இனி ஆட்சிக்கு வரப் போவதும் இல்லை.
சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு போனவர் தான் ஸ்டாலின். சட்டப்பேரவையில் தகராறு செய்தவர் மு.க. ஸ்டாலின். இதை நானே அவரிடம் கேட்கிறேன், அவர் எனக்கு பதில் சொல்வாரா? இன்று புனித வேடம் போடுகிறார்கள்.திராட்சை சாப்பிட நினைத்த நரி கதைக்கும் நமது எதிர்கட்சித் தலைவருக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.
சசிகலா உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்க்க செல்வீர்களா என்ற கேள்விக்கு, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம். தற்போது எங்களது நோக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும். அது குறித்த கேள்வி கேளுங்கள் அவரை போய் பார்க்க வேண்டும், இவரை பார்க்க வேண்டும் என்றும் கேள்வி கேட்காதீர்கள் எனக் கூறினார்.
இதையும் படிங்க: சசிகலா தவிர்த்த அமமுகவை அதிமுக உடன் இணைக்க தூது விடும் துக்ளக்