தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ராஜாபுதுக்குடி, பன்னீர்குளம், வெள்ளாங்கோட்டை, இலுப்பையூரணி ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா இன்று (அக்.22) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், " ஓ.டி.டி. மற்றும் தொலைக்காட்சியில் நேரிடையாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை. கரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குள் மூடப்பட்டுள்ளதால் வேறு வழியில்லை என்பதால் ஓ.டி.டியில் படங்கள் வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், சூர்யா நடித்த சூரைப்போற்று படங்களை வெளியிடுவது தொடர்பாக ஜோதிகா, சூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். திரையரங்குகள் திறக்கும்வரை இடைக்கால ஏற்படாக ஓ.டி.டியில் படங்கள் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த கருத்து உண்மையாக இருந்தால் அந்த கருத்து வரவேற்கக்கூடியது. இடைக்கால ஏற்படாக இருக்கலாம். அதே போன்றுதான் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் தொலைக்காட்சியில் நேரிடையாக வெளியடும் ஏற்படாக இருக்கலாம்.
தமிழ் திரைத்துறையினருக்கு தமிழ்நாட்டில் அரசு பல்வேறு உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 10 கோடி ரூபாய் வழங்கி, குடியரசு தலைவரை வரவழைத்து நடத்தினார்.
சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்ட 25 ரூபாய் லட்சத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 50 லட்சமாக உயர்த்தி வழங்கினார். அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.
கோவாவில் நடக்கும் இன்டர்நேஷனல் பிலிம் திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அதில் நானும் கலந்துகொண்டேன்.
மேலும் அந்த விழாவில் தமிழ் திரைப்படங்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்தோம். இதன் பயனாகத்தான் பார்த்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓணர் திரைப்படங்கள் தேசிய விருது பெற்றிருக்கிறது.
சர்வேதச அளவிலான திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் வகையில் தரமான திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வழங்கபட்டுவந்த அரசு மானிய தொகை 3 லட்சத்திலிருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 லட்சமாக உயர்த்தினார்.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார். 2015-2016 ஆண்டுவரை தயாரித்த 149 படங்களுக்கு 7லட்சம் ரூபாய் வீதம் 10 கோடிய 43லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு தமிழ் சினிமா முன்னேற்றம் பெற்றுள்ளது" என்றார்.