தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடி வருவதாக இருந்தது. அன்றைய தினம் பிரதமரின் காணொலி ஆய்வுக்கூட்டம் இருந்ததைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று ஆய்வுமேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆய்வுசெய்வதற்காக முதலமைச்சர் 13ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார்.
அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை மையத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று அறிவிப்பு வெளியிடப்படும். விளாத்திகுளம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மார்கண்டேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்.
அவர், எங்கு சென்றாலும் கவலையில்லை. அவர் பெயரைச் சொல்லக்கூட விரும்பவில்லை, ஒருவர் போனால் நூறுபேர் அதிமுகவிற்கு வருவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: ‘ஓபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி’ - முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்