தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வேட்பாளர் மோகன் மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.
அப்போது, அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளோம். அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் அன்றே ஓட்டப்பிடாரம் தொகுதியில் கூட்டணி கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது தவிர கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் இந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்தபிறகு ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு பரிசாக நீதிமன்றம் அமைக்கப்படும். இது தவிர புதியம்புத்தூரை மையமாக கொண்டு ஜவுளி பூங்காவும், மதுரை முதல் தூத்துக்குடி வரை சாலைகளை தொழில் வளர்ச்சி பூங்காவாக மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் கொண்டு வரப்படும். வட்ட மக்களின் கனவாக இருக்கக் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரைவில் நனவாகக் கூடிய தருவாயில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.