உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்பட 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 18 பேர் கரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்று கண்டறிய கரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. காலதாமதத்தை குறைக்க, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனையேற்று அரசு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைத்துள்ளது. ஆய்வகம் செயல்படுவதற்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக சோதனைகள் தொடங்கப்பட்டன. ஆய்வகத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா பரிசோதனை ஆய்வகம் 80 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் தினசரி 70 பேருக்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறமுடியும். மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 347 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் 2 மருத்துவர்கள் உள்பட 6 பேர் பணியில் இருப்பர். மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரிசி, பருப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 170 திருநங்கைகளுக்கு அரசின் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரிசி, உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பு, 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'பிரசவத்திற்கு இலவசம் மட்டுமல்ல; நாங்க பிரசவமும் பார்ப்போம்' - மனிதம் காத்த ஆட்டோ சந்திரன்