தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வாடகை கார், வேன், சுமை வாகனம், ஆட்டோ ஓட்டுநர்கள், பந்தல் அமைப்பு, அலங்காரப் பணி, ஒலி ஒளி அமைப்பு, சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட 530 பேருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அரிசி, மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இதேபோல் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன், பள்ளிச் செயலாளர் வெங்கடேஷ், சங்கச் செயலாளர் பழனி குமார் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'உலக நாடுகள் எல்லாம் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டி ஊரடங்கை அமல்படுத்தி வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நமது நாட்டிலும் மே மாதம் 3ஆம் தேதி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமையோடு அரசு பணியாற்றுகின்றது.
அந்த வகையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் சிறப்பான நடவடிக்கைகள் மூலமாக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகராக பணியாற்றி வருகின்றார்கள். பத்திரிகை துறை, தொலைக்காட்சித் துறை, உள்ளாட்சித் துறையில் காவல்துறையை சேர்ந்தவர்களும் பல்வேறு வகையில் சேவையாற்றி மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகின்றனர்.
நமது மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 906 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் 23 பேர் மருத்துவமனையில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மூன்று பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஆயிரத்து 778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 21 ஆயிரத்து 270 தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலா ஆயிரம் ரூபாயை ஒதுக்கி உள்ளார்' என்றார்.
ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் ஆன்லைனில் வெளியிடப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த படத்தை திரையிடப் போவதில்லை என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளது குறித்து கூறுகையில், 'இது தயாரிப்பாளருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் உள்ள பிரச்னை. இதுகுறித்து இரு தரப்பினரிடமும் பேசி நல்ல தீர்வு காணப்படும்' என கூறினார்.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, 'ஊரடங்கு நீடிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும். மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது. அதேபோல் மாநில அரசும் 19 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. பாரதப் பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள்' என கூறினார்.
இதையும் படிங்க... தீப்பெட்டி பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்கள்