இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வங்கி வழங்கிய வீல் சேர், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கீதா ஜீவன்,"தமிழ்நாடு அரசு கரோனா பரவலை தடுப்பதற்காகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 780-லிருந்து 318 ஆக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.