தூத்துக்குடி: மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டம் மூலமாக பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரூ.6.67 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மகளிர் சுய உதவி குழு கடன், பட்டா மாறுதல், புது வீடு வழங்குவதற்கான ஆணை, தனி நபர் கடன் உள்ளிட்ட திட்டங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் மூலமாக மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் சென்று சேரும் வகையில் கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 72 விழுக்காடு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலமாக அதிக மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக அந்த பணிகளை முடித்துவிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே இவை அனைத்தையும் செய்துள்ளோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் ஐடி ரெய்டு சம்பவத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது" என்றார்.
இதையும் படிங்க: திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து