தூத்துக்குடி: ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியானது, ஏ.பி.சி. வீரபாகுவால் 1973ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் தொடங்கப்பட்டது. இந்த வருடம் 2023ஆம் ஆண்டு 50வது பொன்விழா காணுகிறது. இந்த பொன்விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 27) ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவியரின் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் முன்னாள் மாணவியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கல்லூரித்தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் தலைமையில், கல்லூரிச் செயலர் சொ.சுப்புலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான கீதா ஜீவன் தனது கல்லூரி நினைவுகளை எடுத்துக் கூறி தொடக்க உரையாற்றினார். பின்னர், தன்னுடன் பயின்ற சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் தான் படித்த பி.காம் வகுப்பறைக்குச் சென்று தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அமைச்சராக இல்லாமல் கடந்த 1990 ஆம் ஆண்டு தான் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட நினைவுகளை அமைச்சர் எளிமையாக சக தோழிகளுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று இந்தக் கல்லூரியில் 1973 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் மட்டுமின்றி பல்வேறு ஆண்டுகளில் படித்த மாணவிகளும் அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
மேலும், பல்வேறு கல்லூரிகளில் நடக்கும் இந்த நிகழ்வானது, தற்போது தங்கள் படித்த கல்லூரியில் மாணவர் மற்றும் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய மாணவிகள் தெரிவித்தனர். மேலும், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்த கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவிகள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "1973 ஆம் ஆண்டு ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது 2023ஆம் ஆண்டு 50வது பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.முன்னாள் மாணவர்களின் சந்திப்பாகப் பழைய மாணவர்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் நாளாக இந்த சிறப்பான நாளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் 1973ல் படித்த மாணவிகள் முதல் கடந்த ஆண்டு பயின்ற மாணவிகள் வரை வந்திருந்தனர்.
முன்னர், அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் இந்த கல்லூரி தான், பெண்களின் கல்விக்காக அந்த காலத்தில் ஏபிசி வீரபாகு மிகச் சிரமங்களுக்கு இடையில் இந்த கல்லூரியைத் தொடங்கி தற்போது வளர்ச்சி பெற்ற கல்லூரியாக அரசு அதிகாரிகள், ஆன்றோர்கள், சான்றோர்களை உருவாக்கியுள்ளது. இதனுடைய நோக்கம் என்னவென்றால், தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு இருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பன்னீங்க தான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளா தான் இருக்கும்" - பஞ்ச் உடன் அரசியல் பேசிய தருமபுரம் ஆதீனம்!