தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி கீழ பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிளா ஒன்று நேற்றிரவு (நவ.27) புகுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் மிளாவை மீட்டுச் செல்வதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வராததால் திருச்செந்தூர் தீயணைப்பு துறையினரிடம் கயிறு வாங்கி, அந்த கயிற்றில் சுருக்கு வைத்து மிளா கழுத்தில் மாட்டி பிடிக்க முயன்றனர். அப்போது மிளா பயத்தில் அங்கும் இங்குமாக ஓட முயன்றது.
இறுதியில் மிளா கழுத்தில் கயிற்றை இறுக்கி பிடித்தனர். இதில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியது. பின்னர் மிளாவை வனத்துறையினர் மீட்டு திருச்செந்தூர் வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மிளா கயிறு இறுகியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் மிளாவை பிடிப்பதற்கு எந்த ஒரு உபகரணமும் கொண்டு வராமல் கயிறு மூலம் பிடித்ததில் கழுத்து இறுகி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கனிமொழியிடம் கேட்டபோது, ”மிளா ஒரு மான் வகையைச் சேர்ந்தது இது பொதுமக்களும் மற்றும் மற்ற விலங்கினங்களை பார்த்தால் மிரண்டு ஓடக்கூடியதாகும். இதனால் அது மிரண்டு பயந்த நிலையில் இருந்தது. இன்று அந்த மிளா இறந்து விட்டது. உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.
![கண்டனம் தெரிவித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17057185_ila.png)
இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சமூக ஆர்வலர்கள், வன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். டிவிட்டரில் அந்த வீடியோவின் கீழ் கருத்து பதிவிட்ட தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, ”இது மிகவும் வேதனையான ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவம். வன அதிகாரிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். இது குறித்து உடனடி விசாரணை நடத்தி, இந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: புலிகள் காப்பகங்களுக்கு கள இயக்குனர்கள் நியமனம்!