தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில், அந்த அமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் விஜய ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "ஆன்லைன் வர்த்தகத்தினால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று ஆரம்பம் முதலே கூறி அதனை எதிர்த்து வருகிறோம். தற்போது கோவில்பட்டி பகுதியில் ஆன்லைன் வர்த்தகம் என்கிற பெயரில், ஆன்லைன் நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் தங்களது முகவர்கள் மூலமாக வணிகர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பிரபலமான நிறுவனங்களின் பொருள்களை விற்பனை செய்வதற்கும் முயற்சி செய்துவருகின்றனர்.
இதனால், ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மதிப்பில் பிரபல நிறுவனங்களின் பொருள்களை விநியோகம் செய்ய உரிமம் எடுத்துள்ள விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், ஆன்லைன் என்ற பெயரில் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதினால் போலியான, கலப்பட பொருள்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு, ஆன்லைன் விற்பனைக்கு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பொருள்கள் விற்பனை செய்யும் நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவே, இதுபோன்று நேரடியாக ஆன்லைன் நிறுவனங்கள், முகவர்களை நியமித்து பொருள்களை விற்பனை செய்வதை வணிகர்கள் அனுமதிக்க முடியாது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
இதையும் படிங்க: 'பின்னலாடை துறையினருக்கு நிதி அளிக்க விரைவில் அரசாணை' - கைத்தறி, ஜவுளித்துறை இயக்குநர்