தூத்துக்குடி: குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஸ்பிக் நிறுவனம் மற்றும் கனநீர் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தூத்துக்குடியில் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், இந்திய அணுசக்தி துறைக்குச் சொந்தமான கனநீர் ஆலை உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் அம்மோனியா நிறைந்த தொகுப்பு வாயுவை (சிந்தசிஸ் கேஸ்) மூலப்பொருளாகக் கொண்டு, இந்த ஆலை கடந்த 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அணு உலைகளை குளிர்விக்க பயன்படும் கனநீர் தயாரிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து, தொகுப்பு வாயு கிடைப்பது தடைப்பட்டதை தொடர்ந்து, ஆண்டுக்கு 49 டன் உற்பத்தி திறன் கொண்ட கனநீர் ஆலை, கடந்த 2007ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனநீர் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, இந்திய கனநீர் வாரியம் மேற்கொண்டு கனநீர் ஆலை, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஸ்பிக் உரத் தொழிற்சாலையிலும் உற்பத்தியைத் தொடங்கி தொகுப்பு வாயு கிடைக்க வழிவகை செய்தது. இந்த நிலையில், தொகுப்பு வாயுவைப் பெறுவது தொடர்பாக ஸ்பிக் நிறுவனத்துடனும், இயற்கை எரிவாயுவைப் பெறுவது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடனும், இந்திய கனநீர் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் குறித்து முத்தையாபுரத்தில் உள்ள கனநீர் வாரிய நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர்கள் ஸ்ரீ எஸ்.கே.ஜா, ஷைலேஷ் திவாரி, மற்றும் கனநீர் வாரியம் தலைமை நிர்வாகி சத்யகுமார், இயக்குனர் பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தூத்துக்குடியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் வருகிற 2024, ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் கனநீர் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பான முறையில் பாதுகாப்புடன் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு கன நீர் ஆலை குடியிருப்புகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தடையில்லா விநியோகம், பாதுகாப்பான சுற்றுச்சூழல், தூய்மையான, நம்பகமான மற்றும் மலிவான வகையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்படுகிறது. இந்திய நாடு முழுவதும் காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தி வருகிறது.
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து, சேலத்தில் ரூ.1,300 கோடி மதிப்பில், 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் பங்குகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலம் இரும்பாலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் முதற்கட்டமாக 450 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டன. அதுபோல் தென் மாவட்டங்களில் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலை வழியில் கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் ராட்சத இயந்திரங்கள் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லூர் - மச்சிலிப்பட்டினம் இடையே இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்!