தூத்துக்குடி: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சபை மூலம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சபை நிறுவனர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார். இதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி
“இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2ஆவது அலை படிபடியாக குறைந்து, தற்போதைய தொற்று எண்ணிக்கை 30 என குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்று பரவுவதை குறைக்க முடிந்தது.
உருமாறிய டெல்டா, மியூட்டன் வகை வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் சபை மூலம் மோகன் சி.லாசரஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இதுபோன்று திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கி உள்ளார்கள்.
தூத்துக்குடியில் உள்ள மைக்ரோபையாலஜி ஆர்டி-பிசிஆர் லேப் மூலம், இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் அதிகமாக இருந்த போது, தினசரி 4 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மூலமே மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னையில் இருந்து தடுப்பூசிகள் வரவழைத்து, தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, 2ஆவது தவணை செலுத்துவதற்கு, அவர்கள் ஏற்கனவே போட்ட பகுதிக்கு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏசு விடுவிக்கின்றார் சபை நிறுவனர் மோகன் சி.லாசரஸ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, பிற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சுனில் கவாஸ்கர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய நிகழ்வுகள்!