கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதியை மீறி, தூத்துக்குடியில் கறி விருந்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்த பாண்டியன், தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேற்று (மே.24) கறி விருந்துடன் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி, 300 கிலோ ஆட்டுக்கறி விருந்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். ஊரடங்கின்போது, திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்; திருமண மண்டபங்களில் பந்தல் அமைக்கக்கூடாது; ஒலி, ஒளி அமைப்பு இருக்கக்கூடாது; வாழைத் தோரணங்கள் இருக்கக்கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, பாண்டியன் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வாழைத் தோரணங்கள், மின்விளக்குகள், டிஜிட்டல் பேனர்கள் என, 4 தெருக்களுக்கு வைத்துள்ளனர். வரவேற்பு தோரணம், மேடை அலங்காரம் என, தடபுடலாக திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நகரப் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே அபராதம் விதிக்கும் மாவட்ட அலுவலர்கள் இந்த விமரிசையான திருமண வரவேற்பு நிகழ்ச்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்