தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பாலு. இவர் நேற்று (ஜன.31) வழக்கம்போல தனது அலுவல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏரல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் மதுபோதையில் சாலையில் உணவகம் ஒன்றில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது அவ்வழியாக ரோந்து வந்த உதவி ஆய்வாளர் பாலு, முருகவேலை கண்டித்துள்ளார். போதையில் இருந்த முருகவேலை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் உதவி ஆய்வாளர் பாலுவை கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பாலுவை சரக்கு வாகனம் ஏற்றி முருகவேல் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காவல் அலுவலர் ஒருவர் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். தப்பியோடிய முருகவேல் குறித்தும் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து குற்றவாளி முருகவேலை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகவேல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். முருகவேலை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், அவரை 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை கைது செய்தது ஏன்? ஹெச்.ராஜா