மாலத்தீவைச் சேர்ந்த முராய்ப் என்பவரது இழவை கப்பல் 'விர்கோ 9'. மங்கோலிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் தூத்துக்குடியிலிருந்து கருங்கல் ஏற்றிக் கொண்டு ஜூலை 11ஆம் தேதி மாலத்தீவுக்கு புறப்பட்டது.
இந்த இழுவை கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த விவின்குணவான்(38) என்பவர் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தலைமை அதிகாரிகளாக இந்தோனேசியாவைச் சேர்ந்த ஷலாகுதீன் மாஸ்வாதி(27), இக்ரா பாஸ்ரி(32) ஆகியோரும் என்ஜினியராக ஜூமாதில் ஆசிஷ்(31) பணியாற்றி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ(49), இந்தோனேசியாவைச் சேர்ந்த இபுனு பாசரி(30), யாபுல் பகாரி(35), வாயுதீன்(27), மவுலிம் ஹாஸ்யம்(34) ஆகியோர் ஊழியர்களாக அந்தப் படகில் பயணித்தனர்.
இதையடுத்து, இந்த இழுவை கப்பல் மாலி துறைமுகத்துக்கு சென்று சரக்கை இறக்கியது. தொடர்ந்து, 27ஆம் தேதியன்று 9 மாலுமிகளுடன் மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டது 'விர்கோ 9'.
இதனிடையே, புதிதாக ஒரு நபர் இழுவை கப்பலில் ஏறி இருப்பதால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதிய மாலுமி போஸ்கோ நிக்கோலஸ், அக்கம்பலின் உரிமையாளர் முராய்ப்க்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக முராய்ப், தனது கப்பலுக்கு சரக்கு ஏற்றி அனுப்பும், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மர்ம ஆசாமி கப்பலில் ஏறி இருப்பதால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, அந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தினர் தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்த 'விர்கோ 9' கப்பலை சிறைபிடித்த தூத்துக்குடி காலோர காவல் படையினர் அதிலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஒன்பது மாலுமிகளுடன் பத்தாவது நபராக ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக கடலோர காவல்படையினர் அந்த கப்பலை சிறைபிடித்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மத்திய உளவுப்பிரிவு அலுவலர்கள், ரா உளவுப்பிரிவு அலுவலர்கள், கடலோர காவல்படை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, கப்பலில் பத்தாவதாக வந்தவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்தது. இதனால் உஷாரான உளவுப்பிரிவு அலுவலர்கள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அகமது அதீப் எப்படி கப்பலில் ஏறினார்? அவருக்கு யார் உதவி செய்தார்கள்? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை நாடு கடத்தலாமா அல்லது கைது செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.