தூத்துக்குடி: திருச்செந்தூரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் கேடிஸ்வரன் (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதேபோல், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரியதாழை நோக்கி மீன் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை, நாகர்கோவிலைச் சேர்ந்த சுதன் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, தூத்துக்குடியை அடுத்த பழையகாயல் அருகே உள்ள புல்லாவழி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தின் பின்பக்கம் மீன் ஏற்றிச் சென்ற லாரியின் வலதுபுறம் வேகமாக மோதி, நிலை தடுமாறியது. இதில் மீன் ஏற்றிச் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில், பேருந்தின் பின்பகுதி பலத்த சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த மயிலாடுதுறையைச் சேர்ந்த நவீன் (21) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாரி டிரைவர் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, அந்த ஏழு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விபத்து குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்ய திட்டம்.. அரசுக்கு சொந்தம் என கணினி உதிரிபாகங்கள் கடத்தல் முயற்சி! தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய கண்டெய்னர்!