தூத்துக்குடி: அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் அவர் கடையில் இருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாகத் தாக்கி கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிப்காட் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோரம்பள்ளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்துக்குமார் முதல் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இணையத்தில் மாணவியின் ஆபாச போட்டோ பதிவிட்ட உறவினர்கள் கைது!