துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ஆதி தமிழர் பேரவை வடக்கு மாவட்டம் சார்பாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் எப்படியும் இந்தியைத் திணித்து விடலாம் என்கிற கனவை மத்திய அரசு கண்டுகொண்டிருப்பதாகவும், அதனடிப்படையில்தான் தென்னக ரயில்வேயில் இந்தி, ஆங்கிலம் மட்டும்தான் பேச வேண்டும் என்ற ஓர் ஆணையை பிறப்பித்துள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில் திமுகவினர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து உடனடியாக அதனை வாபஸ் பெற வைத்துள்ளதாகவும், தொலைக்காட்சியில் கூட எந்த மொழி பேசுகிறோமோ அதன் இந்தி எழுத்து வடிவம் கீழே ஓட வேண்டும் என்கிற ஓர் ஆணையும் பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகத்தில் மும்மொழித் திட்டம் எந்த நாட்டிலும் கிடையாது எனவும், இருமொழித் திட்டம் மிகச் சரியானது என்றும், தென்னக ரயில்வேயில் உள்ள அனைத்து அலுவலர்களும் தமிழ் பேச வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு எந்த அலுவலர் வந்தாலும் முதலில் அவர்கள் தமிழ் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தங்கள் கோரிக்கை என்றும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து நீடித்து வருகிறது எனவும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கொலை, கொள்ளை நடந்து வருவதை இந்த அரசு சரியாக கவனித்து தன்னை சீர்திருத்திக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அதியமான் தெரிவித்தார்.