தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரோனா பொதுமுடக்கத்தால் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு தசரா குழுவையும் சோ்ந்த இரண்டு நபா்கள் மட்டுமே கோயிலுக்குச் சென்று காப்புக் கயிறுகளை வாங்கிச் சென்று ஊரில் உள்ள வேடமணியும் பக்தா்களுக்கு கிராமக் கோயில்களில் வைத்து வழங்கி காப்பு கட்டினா். தசரா குழுவினா் தங்களது கிராமங்களில் மட்டும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு கோயில் முன்புறம் நடக்கிறது.
நாளை (அக். 27) அதிகாலை 3 மணிக்கு உற்சவமூா்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு உற்சவமூா்த்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் ஆகியன நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி