தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவானது, மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் மாலை அணிவித்து, காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் அணிந்து விரதம் இருந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.
அந்த வகையில், இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நவராத்திரியை முன்னிட்டு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இதனையடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷா சூரசனை வதம் செய்வதோடு தசரா நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக நிறைவடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த தசரா திருவிழாவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி, முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணி, தென்காசி உதவி ஆணையர் கோமதி மற்றும் தூத்துக்குடி துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் நிரந்தர உண்டியல்கள் 12, தற்காலிக உண்டியல்கள் 60 என மொத்தம் 72 உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் பக்தர்களால் ரூ.4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 516 ரொக்கப் பணமாகவும், தங்கம் 137.80 கிராமும், வெள்ளி 12,973.50 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு தசரா திருவிழாவை விட, இந்த ஆண்டு ரூ.61 லட்சம் கூடுதலாகும். கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் தூத்துக்குடி ஐயப்பா சேவை சங்கத்தினர், மாணவ, மாணவிகள் பொதுமக்கள், பிரதிநிதிகள் என பலரும் காணிக்கை எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது.. ரசிகர்களுடன் படம் பார்க்கும் ராகவா லாரன்ஸ்!