கோவில்பட்டி பூவநாதர் ஆலயத்தில் ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குழந்தையை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையை விட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி மருத்துவமனைக்கு வந்த விளாத்திகுளம் விநாயகபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 36) என்பவர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த தனது மனைவி சசிகலாவையும், ஒன்றரை வயது குழந்தையும் காணவில்லை என்றும், அவர்களை தேடி அழைத்து செல்லவே நான் இங்கு வந்தேன் எனவும் கூறினார்.
அதே சமயத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் மகேந்திரனின் மனைவி சசிகலா தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இருவரிடமும் நடத்திய விசாரணையில், கோவிலில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஆண் குழந்தை மகேந்திரன்- சசிகலா தம்பதியரின் மகன் கவின்குமார் என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கவின்குமாரை மகேந்திரன் -சசிகலா தம்பதிகளிடம் ஒப்படைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.