தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக்கோட்டை மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது. இந்த வீரசக்கதேவி ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறும். இதையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மனின் விழாவும் நடைபெறும். மேலும், இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல், அமைதியான வகையில் திருவிழாவை நடத்தி முடித்திட 144 தடை உத்தரவு 14-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.
கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் நினைவிடத்திலிருந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் குழு சார்பில் கொண்டுவரப்பட்ட ஜோதி, முதல் ஜோதியாக வீரசக்கதேவி ஆலயம் வந்தடைந்தது. இதைதொடர்ந்து திருச்சி, நெல்லை கோவில்பட்டி, திருச்செந்தூர், தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜோதிக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்டபொம்மன் சந்ததியை சேர்ந்தவர்கள், இந்த திருவிழாவிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்டபொம்மன் ஜோதி எடுத்துவரப்பட்டது. அந்த ஜோதிக்கு முன்பாக தேவராட்டம், சிலம்பாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க இளைஞர்கள், இளம் பெண்கள் நடனமாடி வருகை தந்தனர். முதலில் வீரசக்கதேவி ஆலயத்தில் வழிபட்ட ஜோதி ஏந்தி வந்தவர்கள், தொடர்ந்து கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவ சிலைக்கு முன்பாக ஜோதியை வைத்து, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி சென்றனர்.
மேலும், வரக்கூடிய அடுத்த தலைமுறையினர் இந்த கோட்டையையும், இங்குள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்த்து ஒரு சுதந்திர போராட்ட வீரரின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த திருவிழா முக்கியமானதாகும் என பொதுமக்கள் தெரிவித்தனர். வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஆலய வளாகம் மற்றும் கோட்டை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆலய வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீரசக்கதேவியை தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். இதை ஒட்டி சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்