தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள தப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு நேரில் சென்ற தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.
தாப்பாத்தி அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் இருக்கும் குடியிருப்புகள், கழிவறைகளையும் கனிமொழி பார்வையிட்டார்.
திமுக அரசு அகதிகள் முகாமிற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் உறுதி அளித்தார்.
தொடர்ந்து இந்த அகதிகள் முகாமில் உள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.