தூத்துக்குடி: கடந்த 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் போவையில் கடந்த 19-10-2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!