தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கையுறை, முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்குப் பின்பு கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, "மாவட்டத்தில் இதுவரை 22,650 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 639 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 87 விழுக்காட்டினர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சராசரியாக தினமும் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த ரூ.60 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பரிசோதனை கூடங்கள் நிறுவப்படவுள்ளன.
கரோனா பாதிக்கப்பட்ட நபர் குணமடையும் முன்பு தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது. பெயரில் ஏற்பட்ட குழப்பத்தில் சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல முற்பட்டார். ஆனால், இதை மருத்துவமனையிலேயே கண்டுபிடித்து மருத்துவர்கள் அவரைப் பிடித்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி