தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை காவலர்களால் நடத்தப்பட்டது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
கொல்லப்பட்ட வியாபாரிகள் எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். எனவே அவர்களுடைய மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது ஒரு சமூக நாகரிகத்தின் கோரிக்கையாகும்.
கொலைசெய்யப்பட்ட வியாபாரிகளின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும். கொலைசெய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்காலிகமாக பணி நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தவறான செயல். ஒரு சாதாரண குற்றச் செயலுக்குக்கூட குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நாம் கைதுசெய்திருக்கிறோம்.
ஆனால் இவர்கள் விஷயத்தில் சமூகமே அவர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்கிறபோது சம்பந்தப்பட்ட காவலர்களைத் தமிழ்நாடு அரசு கைதுசெய்யவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற்ற உடனே இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
அந்த கோரிக்கை வலுப்பெற்றதன் மூலமாக உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு அதன் பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாகச் சொல்கிறார்கள். இது ஒரு தந்திரமான, புத்திசாலித்தனமான வேலையாகும். விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கும், நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லை. ஒரு முதலமைச்சர் நினைத்தால் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றலாம். விசாரணையை காலம் தாழ்த்துவதற்கான முயற்சியே இது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் காவல் துறைத் தலைமைக்கும், தமிழ்நாடு அரசின் தலைமைக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது குற்றவாளிகளுக்கு துணை போகாதீர்கள் என்பதுதான். காவல் துறையில் இருக்கும் ஒருசில கறுப்பு ஆடுகளுக்காக மற்றவர்கள் ஏன் சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டும். எனவே தவறு செய்தவர்களை அப்புறப்படுத்துங்கள், அவர்களைக் கைது செய்யுங்கள்.
இதனுடன் பேய்குளம் சம்பவத்தையும் விசாரணைக்குள்படுத்த வேண்டும். சிபிஐ விசாரணைக்கு காலம் தாழ்த்துவது இறந்துபோனவர்களுக்கு செய்கின்ற துரோகம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு சரியான வகையில் இல்லை. ஆட்சியில் நடந்த தவறை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டினால், ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு முன்பிருந்த ஆட்சிகளிலும் இதுபோன்று நடந்தது என்று சொல்வது பதிலாகாது.
அவர்கள் அப்படி கூறுகிறார்கள் என்றால் தவறை ஏற்றுக்கொள்கிறார்கள் என அர்த்தம். பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். இவ்வழியே கடந்த காலங்களில் நடந்திருக்கிறது என்று சொல்வது தவறு.
காவலர்கள் மிருகத்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆசனவாயிலிருந்து ஏராளமான ரத்தம் வந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவர்களை அருகிலுள்ள சிறைக்கு கொண்டுசெல்லாமல் 100 கிலோமீட்டர் அப்பால் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டு சென்றதிலேயே குற்றம் உள்ளது. அதில் சூழ்ச்சியும் உள்ளது.
இரண்டாவதாக நீதித் துறை நடுவர்கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்காமல் சிறையில் அடைப்பதற்கு அனுமதி அளித்திருக்கிறார். அதுவே விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடியது. அவர் எதையும் பார்க்காமல் சிறையில் அடைப்பதற்கு உத்தரவு வழங்கியிருக்கிறார். எல்லாம் அவசர அவசரமாகத் திட்டமிட்டு நடந்திருக்கிறது.
இதில் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க காலம்தாழ்த்தும் எனில், இது ஒரு மக்கள் இயக்கமாக மாறும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு இன்று (ஜுன் 29) இழப்பீடு நிதி வழங்குவதற்கு முடிவு செய்திருக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க... 'சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்' - கே.எஸ். அழகிரி