தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் 2020-2021 ஆம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் லட்சுமி புரம் மேல காலனி, விநாயகர் நகர், ஆலம் பட்டி கிராமங்களுக்கு 46 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு கலைக் கல்லூரி அருகில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூசெய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மெளனம் சம்மதம் என்று தான் அர்த்தம். பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களை தவிர மற்ற நிர்வாகிகளின் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துகொள்ள முடியாது.
அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் திமுகவினர் கிராம சபை கூட்டம் போடுகிறார்கள். திமுகவை விரட்டியடிப்போம் என நாங்கள் தீர்மானம் போட்டு கூட்டம் போட ரொம்ப நேரம் ஆகாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
திமுகவினர் பதவி வெறியோடு இருக்கிறார்கள். அந்த வெறியில் தான் கண்ணை மூடிக்கொண்டு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: அழகிரியை தவிர்த்துவிட்டு திமுக ஆளுங்கட்சியாக வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜு