தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டனம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெறும் நில எடுப்பு பணிகளையும், குலசேகரபட்டனம் முத்தாரம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக சுற்றுலாத் துறையின் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொண்டு வரும் அடிப்படை வசதிக்கான மேம்பாட்டு பணிகளையும் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குலசேகரபட்டனம் பகுதியில் இஸ்ரோ மூலம் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 பிரிவுகளாக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வட்டாட்சியர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக 4 யூனிட்டுக்கு நில எடுப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அதேபோன்று குலசேகரபட்டனம் முத்தாரம்மன் கோயிலுக்கு, தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இ-டாய்லெட் மற்றும் சூரிய மின்சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 12 நாள் 144 தடை உத்தரவு கடுமையாக இருக்கும் - எம்.ஆர். விஜயபாஸ்கர்