தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரை நாகரீகம் ‘உலக நாகரீகத்தின் தொட்டில்’ என கருதப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த 1876ஆம் ஆண்டு டாக்டர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து, அதில் கிடைத்த பொருள்களை ஜெர்மன் நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து பல அகழாய்வுப் பணிகள் இங்கு நடந்தது.
இதில் 1902ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் இரியா என்பவர் அகழாய்வு செய்தபோது, நூற்றுக்கணக்கான பொருள்களை எடுத்துச் சென்று சென்னையில் பார்வைக்கு வைத்துள்ளார். மேலும், கிடைத்த பொருள்களை எல்லாம் பட்டியல் செய்துள்ளார். ஆனாலும், முழுமையான அறிக்கை வெளியிடவில்லை.
இதனிடையே, கடந்த 1920ஆம் ஆண்டு சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கத்து அறிஞர் பானர்ஜி, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என தெரிவித்தார். இதனால் ஆதிச்சநல்லூர் சர்வதேச அளவில் கவனிக்க வைத்தது. இருப்பினும், முறையான அகழாய்வு அறிக்கை ஆதிச்சநல்லூருக்கு வரவில்லை.
அதேநேரம், இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வை முனைவர் தியாக.சத்திய மூர்த்தி தலைமையிலான தொல்லியல் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனால், இதன் அகழாய்வு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு, ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். பின்னர், அதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணி நடந்தது.
இதனால் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் 2021 மார்ச் மாதத்தில் அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் முதல் கட்ட பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வுப் பணிகள் நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இதுவரை முதுமக்கள் தாழி, இரும்புப் பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், வெண்கலத்தால் ஆன ஆடு, நாய், மான், நீர்கோழி, மீன் தூண்டில் முள் மற்றும் மரத்தினாலான கைப்பிடி கொண்ட கத்தி ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அகழாய்வுப் பொருட்களை ஆவணப்படுத்தும் பணியின்போது ஒரு முதுமக்கள் தாழி பக்கவாட்டில், இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆதிச்சநல்லூருக்கும், கடல் சார் வணிகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தாலான நாய், மான், ஆடு பொம்மைகள் கண்டெடுப்பு