தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது.
ஆலை கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரி பாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. இதனை முழுமையாக வரவேற்கின்றோம். மேலும், கூடுதலாக அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு, அது குறித்து விவாதம் நடத்தப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்றிய பிறகும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேரடியாக சந்திக்க அனுமதி வாங்கித் தர வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
அதேபோல் சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி உள்ளோம். பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் நேற்று பேசும்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறதாக கூறினார்.
இது பொய்யான தகவல். ஹிந்துஸ்தான் நிறுவனம் நான்கு பிரிவுகளாக 2018ஆம் ஆண்டுக்கு பின்பு விரிவாக்கம் செய்து உள்ளது. பிர்லா குரூப்ஸ் தாமிர உற்பத்தியில், ஐந்தரை லட்சம் உற்பத்தியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் ஸ்டெர்லைட்டில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு, இது போன்ற கருத்துக்களை பதிவு செய்தார்களா என்ற எண்ணம் உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் இறந்து ஐந்து வருடம் ஆகிறது. பிரதமர் இறந்த 15 உயிரிழப்புக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. அண்ணாமலைக்கு மீண்டும் மீண்டும் சொல்லக் கூடியது என்னவென்றால், இது போன்ற கருத்துக்களை மக்கள் மனதில் திணித்தால், இந்த மண்ணில் அடுத்த தடவை (அண்ணாமலை) கால் வைக்கும்போது தக்க பதிலடியும், எதிர்ப்பையும் கண்டிப்பாக செய்து காட்டுவோம்” என்றார்.