நாடு முழுவதும் பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதனால், தொழிலாளர்களின் வேலைக்கான உத்திரவாதத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனத்திற்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல், விவசாய நலனுக்கு எதிரான சட்டங்களையும் மத்திய அரசு திணித்துவருகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார சக்கரங்களுக்கு முதுகெலும்பாக உள்ள துறைமுகங்களில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும்விதமாக மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. இதனால் துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆபத்தை எதிர்நோக்கும் சூழல் உள்ளது.
மத்திய அரசின் இத்தகைய தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த அழைப்புவிடுத்திருந்தன.
அதை ஏற்று தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் சங்கம், அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் தென் தமிழ்நாட்டில் கப்பல் சரக்குப் போக்குவரத்தில் முன்னணியில் திகழ்கிறது.
தற்போது இந்த வேலை நிறுத்தத்தினால் சரக்குக் கப்பல்களிலிருந்து சரக்கு கையாளுகை முற்றிலும் பாதிக்கப்பட்டு, சரக்குப் பெட்டகம் மாற்றுதல், தூத்துக்குடி துறைமுக கனரக வாகன தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் உள்பட அனைவரும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ளதால் துறைமுகத்தின் ஏற்றுமதி-இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, காத்திருக்கும் கப்பல்களை துறைமுகத்திற்கு இழுவை கப்பல் மூலம் இழுத்துவரும் பணியும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வ.உ. சிதம்பரனார் துறைமுகத்துக்கு ஒரேநாளில் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிஐடியூ சங்கத்தின் நிர்வாகி ரசல் கூறுகையில், “மத்திய அரசு பெருந்துறைமுகங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் இயற்றியுள்ள சட்டத்தினைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் அகில இந்திய வேலைநிறுத்தம்: துறைமுகத்தில் வேலை பாதிப்பு