தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் நிதியில் இருந்து அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனாவில் இருந்து மக்களைக் காக்க வேண்டி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 9 ஆயிரத்து 618 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் நமது மாவட்டம் தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்.
நடிகர்கள் சம்பள விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட முடியாது. இது செல்வமணிக்கு நன்றாகத் தெரியும். இது தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், நடிகர் சங்கங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கூட்டாக இணைந்தும், அரசை அணுகி ஒரு சுமுக முடிவு எடுத்தால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும். அதற்காக ஒத்துழைக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.