தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், வ.உ.சி துறைமுகத்தில் சிறந்த ஏற்றுமதியாளர், துறைமுக உபயோகிப்பாளர்கள், சிறந்த துறைமுக சேவையாளர்கள், சிறந்த தொழில் முனைவோர்கள், சூப்பர் பிராண்ட் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
இவ்விழாவில் உரையாற்றிய தமிழிசை, வளம் மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுப்பேன். இந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கும் உப்பு, வாழை, பனை பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தொழிலை மேம்படுத்தவேண்டும். இந்தப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டிற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருந்து நான் தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானவிலிருந்து முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். நல்லது செய்யவே ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்னை ஆளுநராக ஆக்கியுள்ளனர். அதனை பயன்படுத்தி நல்லது செய்வேன் என்றார்.
இவ்விழாவில் இந்திய வியாபார தொழிற்சங்க கூட்டமைப்பைச் சார்ந்த கணபதி, இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பெண்களின் பாதுகாப்புக்கு தமிழிசை கூறும் அறிவுரை!