தூத்துக்குடி டாக்டர் ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளக் கல்லூரி மீன்வள ஆராய்ச்சி நிலையம், மீன்பிடி தொழில் நுட்பவியல் துறை, மீன்வள பொறியியல் துறை ஆகியவை இணைந்து நடத்தும் இயந்திர மீன்பிடி படகு ஓட்டுநர்களுக்கான என்ஜின் பராமரிப்பு, கடல் பாதுகாப்பு பயிற்சி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ”மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட கற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை இதுவரை 100 பேர் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது தவிர இன்னும் சில மாதங்களில் புதிதாக பயிற்சி வகுப்புகளும் இங்கே ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி மூலம் மீன்வளம், ஆழ்கடலில் மீன் பிடித்தலின்போது படகில் ஏற்படும் பழுதை சரி செய்வது, இயற்கை பேரிடர் காலங்களில் ஆழ்கடலில் சிக்கிக் கொள்ளும் சமயங்களில் எவ்வாறு நம்மை தற்காத்துக் கொள்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியை முடித்தவர்கள் இதே துறையில் பல்வேறு இடங்களிலும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை பெற முடியும். எனவே பயிற்சி முடித்த இளைஞர்கள் இந்த பயிற்சியின் நோக்கம், அவசியம் குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.